அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டு ‘ஆயிரு திணை’ (தொ. எ. 208 நச்),‘ஊவயினான’ (256) என்றாற்போல வருதலும், பலவற்றிறுதி நீண்டு ‘பலாஅஞ்சிலாஅம்’ என உம்மைத் தொகையாக வருதலும் (213), ஆகார ஈற்றுள்,குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈறு அகரஈறாகக் குறுகி உகரம் பெற்று (இறா -சுறா – புறா முதலியன) இறவு – சுறவு – புறவு முதலியனவாக வருதலும்(234),இன்றி – அன்றி – என்பன உகரஈறாகி, ‘உப்பின்று’ – ‘நாளன்று’ – எனஅமைந்து வன்கணத்தோடு இயல்பாகப் புணர்தலும் (237),‘அது’ என்ற உகரஈறு வருமொழி ‘அன்று’ என்பது வரின், ஆகாரமாகத்திரிந்து ‘அதாஅன்று’ எனப் புணர்தலும், ஐ வருமிடத்து உகரம் கெட்டு ‘அதைமற்றம்ம’ என்றாற்போலப் புணர்தலும் (258),வேட்கை + அவா = வேணவா என முடிதலும் (288),விண் என வரும் ஆகாயப்பெயர் அத்துச்சாரியை பெற்று விண்ணத்துக்கொட்கும் – விண்வத்துக் கொட்கும் – என்றாற் போலப் புணர்தலும்(305),பொன் என்பது பொலம் எனத் திரிந்து வருமொழி நாற்கணங் களொடும்புணர்தலும் (356),இலம் என்ற உரிச்சொல் படு என்ற வருமொழியொடு புணரும்வழி ‘இலம்படு’என இயல்பாக முடிதலும் (316) ,‘வானவரி வில்லும் திங்களும்’ என்புழி ‘வில்லும்’ எனச் சாரியைஉம் வந்து வானவரி வில்லுள் திங்கள் – என்று வேற்றுமை முடிபாதல்போல்வனவும், கெழு என்ற உரிச்சொல் ‘துறை கேழ் ஊரன்’ என்றாற் போலத்திரிந்து புணர்வதும் (481)தொல்காப்பியனாரான் செய்யுள்முடிபாகக் கூறப்பட்டனவாம்.