செம்மை, சிறுமை முதலியன பண்புப்பகுதி ஆகாமை

செம்மை கருமை சிறுமை முதலியன உடைப்பொருளவாகிய செம்மையன் – கருமையன்- சிறுமையன் – முதலியவற்றிற் கல்லது, இன்னன் என்று பொருளவாகிய செய்யன்- கரியன் – சிறியன் முதலியவற்றிற்குப் பகுதி ஆகா.விகுதிப்புணர்ச்சிக்கண் குழையன் என்பது போல், செம்மையன் – கருமையன் -சிறுமையன் எனப் புணர்வதல்லது மையீறு கெடாது. வலைச்சி புலைச்சி முதலியன(வலைமை – புலைமை முதலாய வற்றின்) மையீறு கெடுதல் ‘விளம்பிய பகுதிவேறாதலும் விதியே’ என நன்னூலாசிரியர் கூறிய விதியால் அமையும்.பதப்புணர்ச்சிக்கண் கருங்குதிரை என்பது கருமையாகிய குதிரை எனவிரியாமையின், கரு என்பது பண்பல்லது, கருமை என்ற பண்புப்பெயர் நின்றுபுணர்ந்தது என்றல் பொருந்தாது. அப்பண்புப்பெயர் நின்று புணருங்கால்கருமைக்குதிரை எனப் புணர்வதல்லது கருங்குதிரை எனப் புணராது.இவ்வாற்றால், செம்மை கருமை சிறுமை முதலியன பண்புப் பகுதி ஆகாஎன்பது பெறப்படும். (இ. வி. எழுத். 45 உரை)