செம்பொன்பள்ளி

செம்பொன்னார் கோயில், செம்பொனார் கோயில் என்றும் சுட்டப்படும் இவ்வூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் (ஞான 25, திருநா 29. 150), முதலில் கோயில் பெயராக அமைந்து, பின்னர் ஊர்ப் பெயராக மாறியிருக்கலாம். செம் பொன்னால் வேயப்பட்ட கோயில் என்ற பொருளில் இப்பெயர் அமையலாம். செம்பொன் பள்ளி என்று தேவாரம் சுட்டிய இவ்வூர்ப் பெயர், கல்வெட்டுகளில், செம்பொன்னார் கோயில், செம்பொன்னாதர் கோயில் எனச் சுட்டப்படும் நிலை, பள்ளியைக் கோயிலாக்கினரோ எண்ணத்தையும் அளிக்கிறது. காவிரியின் கரையில் இருக்கும் இத்தலத் திறையைச் சம்பந்தர்,
வரையார் சந்கோடகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடை யொன்றூரு நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா வூனமே (25-3)
எனப்பாடுகின்றார். என்ற
கானறாத கடி பொழில் வண்டினம்
தேனறாத திருச் சொம்பொன் பள்ளியன்
ஊனறாத தோர் வெண்டலை யிற்பலி
தானறாததோர் கொள்கையன் காண்மினே
என்பது திருநாவுக்கரசர் கூற்று (150-1).