பதத்தொடு விகுதி – பதம் – உருபு – என இவை புணருமிடத்துச் சாரியைஒன்றோ பலவோ வருதலும் தவிர்தலும் (இவ்விருநிலையும் ஒருங்கே பெறுதலாகிய)விகற்பமும் நிகழும். அவ்வாறு வரும் சாரியைகள் : அன், ஆன், இச்சு, இன்,அத்து, நம், தன் (தம்), நும், ஐ , கு, ன், அல், இ, ஞ், ட், ய், து,அள், அவ், அண், அ, ஈ, அக்கு, ஓ, ஏல், ஆ, அற்று, ஆல், உ – முதலியன.(‘முப்பத்து நான்கு’ எனத் தொகை கொடுக்கப் பட்டுள்ள சாரியைஅவ்வெண்ணிக்கை நிரம்புமாறு இல்லை.) ‘இச்சினத்து நந்தனுமை’ என்று பாடம்கொள்க. பெயரிடை நிலைகள் சிலவற்றைச் சுவாமிநாத கவிராயர் ஆகிய இந் நூலாசிரியர் சாரியையாகக் கொண்டுள்ளார்; எழுத்துப்பேறும்உடம்படுமெய்யும்கூடச் சாரியையாக எண்ணப்பட்டுள. அவையெல்லாம் பொருந்தாமைவெள்ளிடை. (சுவாமி. எழுத். 26).