‘சில விகாரமாம் உயர்திணை’

பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்களது ஈற்று மெய் யெழுத்து அல்வழிவேற்றுமை என்ற இருவழியும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும் என்றவிதிக்கு விலக்காக, சிலவிடங்களில் நிலைமொழியீறு திரிந்து வருமொழிவல்லெழுத்து மிகுதலும் மிகாமையுமுண்டு.எ-டு : கபிலபரணர், வடுகநாதன், அரசவள்ளல் – நிலைமொழியீற்று னகரம்கெட்டது.ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்பள்ளி – நிலைமொழி யீறு கெட்டுவல்லெழுத்து மிக்கது.குமரன் + கோட்டம் = குமரகோட்டம், குமரக் கோட்டம் – நிலைமொழியீறுகெட்டு வருமொழி வல்லெழுத்து மிகாமலும் மிக்கும் விகற்பித்தது.இவ்வாறு இருவழியும் உயர்திணையுள் சில தமக்கேற்ற விகாரமாயின. (நன்.159 சங்கர.)