தஞ்சை மாவட்டத்தில் சிறுபுலியூர் என்றே இன்றும் சுட்டப் படும் இடம் இது. மாயூரம் ரயில் நிலையத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள இடம். இடப்பெயர் சிறுபுலியூர் என அமைய, திருமால் கோயில் பெயர் சலசயனம் எனச் சுட்டப் பெறுகிறது. எம் பெருமான் புலிக்கால் முனிவருக்கு, பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதல் பற்றி இவ்வூர் சிறுபுலியூர் என வழங்கப் பெற்றதாகக் கூறுவர்.. இதன் சிறப்பை ஆழ்வார் பாடல்கள் சிறப்பாக இயம்புகின்றன.
வெள்ளம் முது பரவைத்திரை விரிய கரை எங்கும்
தெள்ளும்மணி திகழும் சிறுபுலியூர்
என்கின்றார் திருமங்கையாழ்வார்.
முழு நீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியூர்
புலியூர் என்ற ஊர்ப்பெயர் மிகுதியாக அமையும் போது அனைத்து இடங்களிலும் இப்பெயர்க் காரணமே சுட்டப்படுகிறது. புலித் தோலையுடைய சிவன் இருக்கும் ஊர் என எண்ணின், இங்கு திருமால் கோயிலே சிறப்பாக உள்ளதாக அறிகிறோம். எனவே இப்பெயர்க்குரிய காரணம் தெளிவு பெறவில்லை. இயல்பாக விலங்குப் பெயர்க் காரணம் பொருத்தமாக அமையலாம்.