தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகே சிறுகுடி என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. மதுரை மாவட்டத்தில் நத்தத்துக்கு அருகேயும் இப்பெயருடன் ஓர் ஊர் உள்ளது. குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும், குடி என்றும் சொல்லப்படும். அத்தகைய குடியிருப்புகள் பரப்பின் சிறுமையால் சிறுகுடி எனப் பெயர் பெற்றிருக்கலாம். (சென்னையை அடுத்துள்ள பெருங்குடி என்னும் ஊர்ப் பெயா் ஒப்பு நோக்கத்தக்கது) குறிஞ்சி நிலத்து ஊர் சிறுகுடி எனப் பெயர் பெறும். கடற்கரை ஊரும் அப்பெயர் பெறுகின்றது. இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஊரைக் குறிப்பன அல்ல. பண்ணன் என்ற வள்ளலுக்குரியது சிறுகுடி என்று சங்க இலக்கியம் கூறுகிறது, ஆகவ சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் பெயர் பெற்றான்.
“வாணன் சிறுகுடி அன்ன” (நற். 34029)
“மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி” (௸. 367:6)
“தனக்கென வாழப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி” (அகம். 54: 14 17)
“நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று அவிர் அறல் போன்றே (டி 117 ; 15.19)
“வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
பல்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி (௸ 204: 10 12)
“வாணன் சிறுகுடி வணங்குகதிர் நெல்லின்
யாணர்த் தண்பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன……… ” (௸. 269 : 22 24)
“கிள்ளி வளவன் நல்இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி” (புறம் 70 : 10 13)