சினை என்னும் சொல்லாட்சி

சினையாவது கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறு ஆதலின், ‘குறியதன்இறுதிச் சினை’ (குற்றெழுத்தினை அடுத்து நிற்கும் ஆகார ஈற்றுச்சொல்லின் இறுதியில் நிற்கும் ஆகாரம்) என்புழி, எழுத்தினது கூறு ‘சினை’எனப்பட்டது.‘ முதலும் சினையு ம் பொருள்வேறு படாஅ, நுவலுங்காலைச் சொற்குறிப் பினவே ’ (சொல். வேற். மயங். 6) என்றதனான், ஒன்றற்குச் சினையாவதேபிறிதொன்றற்கு முதலாக வருமாத லின், சொற்றொடரின் சினையாக நிற்கும்சொல்தான் முதலாயவழி, அதற்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து அச்சொற்குச்சினையாம்.‘ யாவென் சினைமிசை உரையசைக்கிளவிக்கு ’ (மொழிமரபு) என்புழி, மியா என்னும் சொற்கு உறுப்பாய் நிற்கும்‘யா’ என்னும் உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது.‘ சுட்டுச்சினை நீடிய ஐஎன்இறுதி ’ (தொகைமரபு 17), ‘சுட்டுச் சினை நீடிய மென்தொடர்மொழியும் ’ (குற்றிய. 22) என்புழி, சுட் டெழுத்தின் மாத்திரையளவு சினைஎனப்பட்டது.‘ நூறென் கிளவி ஒன்றுமுதல்ஒன்பா ற்கு, ஈறுசினை ஒழியா இனஒற்றுமிகுமே ’ (குற்றிய. 67) என்புழி, றகரமெய்யினை ஊர்ந்து நின்ற குற்றுகரம்சினை எனப்பட்டது.இவ்வாறே மொழியிடையிறுதிகளில் ஐகார எழுத்தின் மாற் றெழுத்துக்களாகவரும் அய் என்பதும் மொழியின் உறுப்பாக வருதலின், ‘ஐயென் நெடுஞ்சினை’எனப்பட்டது. (தொ. எ.234 ச.பால.)