தனித்தானும் ககரஒற்று முதலியன போல அகரமொடு சிவணி யானும் இயங்கும்
இயல்பின்றி, ஒரு மொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாகவுடைய
குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்பெழுத்தாம்.
சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றும் அகரம் போலத் தனித்து நிற்றல்
ஆற்றாமையின், நெடுங்கணக்கினுள் பெறப் படா ஆதலின், இவை ‘எழுத்து ஓரன்ன’
எனப்பட்டன. (சூ. வி. பக். 18, 19)
தமக்கெனத் தனித்த பிறப்பிடமின்றித் தாம் சார்ந்த எழுத்தின் பிறப்பே
பிறப்பிடமாகத் தோன்றும் குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற
மூன்றே சார்பெழுத்தாம். (தொ. எ. 101 நச்.)
உயிரும் மெய்யுமாகிய முதலெழுத்தைச் சார்ந்து அவற்றின் இடமாகப்
பிறப்பன சார்பெழுத்துக்களாம். அவையாவன உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை,
ஒற்றளபெடை, குற்றிய லிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்
குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்ற பத்தாம். (நன்.
60)
உயிர்மெய் உயிரும் மெய்யும் கூடிப் பிறத்தலானும், ஆய்தம் உயிர்போல
ஒரோவழி அலகு பெற்றும் மெய்போல ஒரோவழி அலகு பெறாதும் ஒருபுடை ஒத்து
அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனையவை தத்தம் முதலெழுத்தின்
திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின. (நன். 60 சங்.)
தம்மொடு தாம் சார்ந்தும், இடன் சார்ந்தும், இடனும் பற்றுக் கோடும்
சார்ந்தும் விகாரத்தால் வருதலின் சார்பெழுத் தாயின. (மயிலை.)