சார்பெழுத்துக்கள் மூன்றும், தாம் சார்ந்து தோன்றும் தலைமை
யெழுத்துக்களின் வளியிசை – வினைக்கள முயற்சி – பிறப்பியல்புகளோடு
ஒருங்கொத்து, தத்தம் இயல்பொடு கூடி அவ்விரண்டு தன்மையும் ஒத்த
தோற்றத்தோடு உருவாகிப் பிறக்கும்.
வருமாறு : மியா என்பதன்கண் நிற்கும் குற்றியலிகரம், மகரத்தினது
பிறப்பிடமாகிய இயைந்த இதழை யும் யகரத்தின் பிறப்பிடமாகிய அடிநா அண்ணத்
தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
நாகரிது என்னும் சொற்களுள் நிற்கும் குற்றியலுகரம், தனது
பற்றுக்கோடாகிய ககரமெய் பிறப்பிடத்தையும் சார்பாகிய அகரத்தின்
பிறப்பிடத்தையும் சார்ந்து, தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
அஃது என்னும் சொற்கண்நிற்கும் ஆய்தம், அகரத்திற்கும் தகர
மெய்க்கும் உரிய அண்ணம் – பல்- நா- ஆகிய உறுப்புக்களின் தொழிலான்
அவற்றைச் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும். (தொ.எ.101.
ச.பால.)