உருபுகள் புணருமிடத்து இன்ன ஈறு இன்ன சாரியை பெறும் என்ற வரலாற்றுமுறைமையே சாரியை நிலையும் கடப் பாடாம்.உருபேற்கும்போது, அ ஆ உ ஊ ஏ ஒள என்ற ஆறு ஈறும் இன் சாரியை பெறுதல்;பல்ல பல சில உள்ள இல்ல, யா வினா என்பன வற்றுச் சாரியை பெறுதல்; அவைஇவை உவை என்பன வற்றுச் சாரியையும், சில உருபிற்கு வற்றுச்சாரியை யோடுஇன்சாரியையும் பெறுதல்; ஓகார ஈறு ஒன்சாரியை பெறுதல். அகர ஆகார ஈற்றுமரப்பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல்; (தொ. எ. 173 – 181 நச்).ஞகர நகர ஈறுகள் இன் பெறுதல் 182 ; அவ் இவ் உவ் என்பன வற்றுப் பெறுதல் 183 ; தெவ் என்பது இன் பெறுதல் 184 ; மகரஈற்றுப் பெயர்கள் அத்தும் இன்னும் பெறுதல் 185, 186 ; யான் யாம் நாம் தாம் தான் என்பன என் எம் நம் தம் தன் எனவும்,நீ ‘நின்’ எனவும், நும் என்பது இயல்பாகவும் அமைந்து உருபேற்றல்187, 188, 192 ; எல்லாம் என்ற பெயர் உயர்திணைப்பொருட்கண் நம் சாரியையும்,அஃறிணைப் பொருட்கண் வற்றுச் சாரியையும் பெறுதல் 190, 189 ; எல்லார் என்ற பெயர் தம்மும் உம்மும் பெறுதல் 191 ; எல்லீர் என்ற பெயர் நும்மும் உம்மும் பெறுதல் 191 ; அழன் புழன் என்பன அத்தும் இன்னும் பெறுதல் 193 ; ஏழ் என்ற எண்ணுப்பெயர் அன்சாரியை பெறுதல் 194; குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் இன்சாரியை பெறுதல் 195 ; எண்ணுப் பெயர்கள் அன்சாரியை பெறுதல் 198 ; அஃது இஃது உஃது என்ற சுட்டுப் பெயர்கள் ஆய்தம் கெட்டுஅன்சாரியை பெறுதல் 200 ; யாது என்ற வினாப்பெயர் அன்சாரியை பெறுதல் 200 ; திசைப்பெயர்கள் ஏழனுருபு ஏற்குமிடத்து இன்சாரியை பெறுதலும்பெறாமை யும் 201 என்பன போல்வன பெயர்ச்சொற்கள் உருபேற்கு மிடத்துச் சாரியைநிலையும் கடப்பாடுகளாம். (தொ. எ. 173 – 202 நச்.)