திருச்சீயாத்த மங்கை என்று மக்களால் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது.
பூத்த பங்கயப் பொகுட்டின் மேற் பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகெலாம் புகழ்வுறுத் தகைத்தாய்
வாய்த்த மங்கல மறையவர் முதற் பதி வனப்பு
என சேக்கிழார் இத்தலச் சிறப்பு சுட்டுகின்றார் (திருநீல -1). திருஞான சம்பந்தரும், சங்கையில்லா மறையோர் அவர் தாம் தொழும் சாத்தமங்கை (316-10) என்று பாடும் நிலையைக் காண, மறையவர் நிறைந்த இடம் இது என்பது தெரிகிறது. எனினும், சாத்தமங்கை என்ற பெயரைக்காண, இதுவும் சாத்தங்குடி போன்று வணிகர் நிறை பகுதி காரணமாகச் சாத்த மங்கலம் எனப் பெயர் பெற்ற பின்னர் சாத்தமங்கையாகியிருக் கலாம் எனத் தோன்றுகிறது. மட்டுமல்லாது இது உலகெலாம் புகழ்வுறு தகைத்தால் எனச் சேக்கிழார் சுட்டும் தன்மையில் மூதூராக இருந்திருக்கும் வாய்ப்பு அமைகிறது. சிறப்புடைய ஊராக இருந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எனவே முதலில் வணிகர் பதியாயிருந்த சாத்தமங்கை பின்னர் கோயிற் சிறப்புக் காரணமாக மறையவர் பதியாகவும் திகழ்ந்தது எனக் கூறல் பொருத்தமாக அமையும். மேலும் சாத்தமங்கையும் சாத்தை என்று வழங்கிய வழக்கை நம்பியாண்டார் திருத் தொண்டர் தொகை (30) காட்டுகிறது. நீதித் திகழ் சாத்தை நீலநக்கன் எனும் வேதியனே இன்றுசீயாத்த மங்கை எனத் திரிந்து வழங்கும் நிலை அமைய மங்கலம் என்ற பொதுக்கூறு குடியிருப்புப் பகுதி எனவும் பார்ப்பனக் குடியிருப்பு எனவும் சங்க இலக்கிய நிலையில் நின்று விளக்கும் நிலை கி.நாச்சிமுத்துவிடம் தெரிகிறது. இந்நிலையில் பார்க்க அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பகுதி கள் மங்கலம் என முதலில் பெயர் சூட்டப்பட்டன. முதலில் மறையவர்க்கும் பின்னர் பிறருக்கும் அளிக்கப்பட்டன. பின்னர் யாவரும் வசிக்கும் ஊர்ப்பொதுச் கூறாக அமைந்தது எனத் தோன்றுகிறது. இந்நிலையில் வணிகர்க்கு அளிக்கப்பட்ட இடம் அல்லது வணிகர் குடியிருப்பு பகுதி என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாமா ? என்பது மேலும் சிந்திக்கத்தக்கது. இங்குள்ள கோயில் அயவந்தி எனச் சுட்டப்பட்டது. திருநாவுக்கரசர் தம் பாடலில் (265-8, 301-3) அயவந்தி ஈசனைப் புகழ்கின்றார். மயிலை சீனிவேங்கடசாமி திருத்துறைபூண்டி பற்றி கூறும் இவ்வூரில் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தி லுள்ள திரிபுவன சக்கரவர்த்தி இராசராசத் தேவர் III உடைய 11 – வது ஆண்டில் (கி.பி. 1227 மே 15) எழுதப்பட்ட சாசனத்தில் சாத்தமங்கலத்தைச்சார்ந்த பள்ளிச் சந்தம் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத் தில் சமண கோயிற்குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப் படுகிறது என்கின்ற போது இரண்டும் ஒன்றாக இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.,