சந்தியக்கரம்

அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் தம்முள் ஒத்து எய்தின் ஐ
என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும். அகரத்துடன் உகரமும் வகரமும் தம்முள்
ஒத்து ஒருதன்மையவாக எய்தின் ஒள என்னும் நெட் டெழுத்து ஒலிக்கும்.
‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று
முடித்தல்’ என்னும் உத்தியான், அகரக் கூறும் இகரக்கூறும் தம்முள்
ஒத்து எகரம் ஒலிக்கும்; அகரக் கூறும் உகரக் கூறும் தம்முள் ஒத்து
ஒகரம் ஒலிக்கும் எனக் கொள்க.
இனி இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, தமிழ்
நூற்பயிற்சி ஒன்றுமேயுடையார் எழுத்துப்போலி உணர்த்திற்று என்று பொருள்
கொண்டு,
அ இ = ஐ; அய் = ஐ; கஇ = கை; கய் = கை
அ உ = ஒள; அவ் = ஒள; கஉ = கௌ; கவ் = கௌ
என உதாரணம் காட்டுவர். அவ்வாறு பொருள்கொண்டு உதாரணம்
காட்டுமாற்றால் பெரும்பயன் இன்மையானும், வடநூலொடு மாறுபடும் ஆதலானும்
அது பொருந்தாது என்க. (நன். 125 சிவஞா.)