நன்னூலார் ‘சுட்டியா…… முதலாகும்மே’ என்று ஙகரம், அ இ உ
என்னும் மூன்று சுட்டும் – யாவினாவும் – எகரவினாவும்- என்னும்
இவற்றின்வழி, அகரத்தொடு மொழிமுதலாகும் என்று கூறியமை பொருந்தாது.
மொழிக்கு முதலாம் எழுத்து இவை, ஈறாவன இவை என ஈண்டுக் கருவி செய்தது,
மேல் புணரியலில், நிலைமொழி ஈறு வருமொழி முதலோடு இயையப் புணர்க்கும்
பொருட்டன்றே? அவ்வாறு புணர்த்தற்கு இயைபில்லாத ஙகரமும், அங்ஙனம் –
இங்ஙனம் – உங்ஙனம் – யாங்ஙனம் – எங்ஙனம் – என இவ்வாறு மொழிக்கு
முதலாம் என்றல் பயனில் கூற்றாம். அன்றியும், அங்கு – ஆங்கு – யாண்டு-
யாண்டையது – அன்ன – என்ன – என்றாற்போலும் இவ்வொற் றுக்களும் (ங், ண்,
ன் என்பன) மொழிக்கு முதலாம் என்றல் வேண்டுதலின், அவர்க்கும் அது
கருத்தன்று என்பது. (இ.வி. எழுத். 27 உரை)