கோவலூர்

திருக்கோயிலூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று, தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம் இது. பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ளது இவ்வூர். ஊர் மேலூர், கீழூர் என்ற இரு பகுதிகளாக அமைகிறது. கீழூரில் சிவன் கோயிலும், மேலூரில் திருமால் கோயிலும் உள்ளன. இவ்வூரின் வளம் குறித்து நாயன்மார் ஆழ்வார் இருவரும் பாடியுள்ளனர். கோவலூர் என்ற ஊர் கோவல் என்ற பழம் பெயரை யுடையது. சங்க இலக்கியம் முதற் காணப்படும் இவ்வூர்ப் பெயர் ஊரின் பழமையையும் தருகின்றது. மலையமான் திருமுடிக்காரி இந்நாட்டை ஆண்டு வந்த தன்மையை அகநானூறு 30 ஆம் பாடல் தருகிறது.
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க்காரி கொடுங்கான் மூன்றுரைப்ப
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்’
என்ற பகுதி கோவல் என்ற ஊர்ப்பழமையைச் சுட்டும். புறநானூறு 99 ஆம் பாடல் கோவலூர் நூறிய அதியமானின் வெற்றி சுட்டும். மலையமான் ஆண்ட நிலையில் இந்த நாடு மலையமான் நாடு என்றும் மலாடு என்றும் சுட்டப்பட்டது.கொடிக்குலவும் மதிற் கோவலூர் வீரட்டம்’ என்பது சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை (34) காட்டும் எண்ணம்.
வளங் கொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்கு கோவணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே (236-5)
என்பது சம்பந்தர் பாடல்.
கொழித்து வந்து அலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீரட்டனீரே (69-3)
என்கின்றார் அப்பர் ஆழ்வார் பாடல்களும் இவ்வூரின் வளத்தை சிறப்பாகக் காட்டுகின்றன.
கோங்கு அரும்பு சுர புன்னைக் குரவு ஆர் சோலைக்
குழாம் வரிவண்டு இசை சைபாடும் பாடல் கேட்டுத்
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்
பெரிய – திருமொழி -2, 4, 10
இவ்வாறு பல எண்ணங்கள் அமையினும் ஊர்ப்பெயர் காரணம் தெளிவு பெறவில்லை. இங்குள்ள பெருமாள் கோயிலில் உள்ள கொடி மரம் சமணருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்று ஐயுறுகின்றனர். இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்றும் கருதத்தக்கது என்ற எண்ணம் இவ்வூர் தொடர்பானது,