தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற பெயருடன் திகழ்கிறது இவ்வூர். மூவர் பாடலும் பெற்ற இவ்வூர்ப் பெயர் குறித்து எண்ணங்கள் தெளிவு றவில்லை. நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்ற மையால் கோளிலி என வழங்கப் பெறுகிறது என்ற எண்ணம் அமைகிறது. திருஞா னசம்பந்தர்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி யெம் பெருமானே (62-1)
எனப்பாடுகின்றார். எனவே கோளிலி என்ற பெயர் இறைவன் பெயராக அமைந்து பின்னர் ஊர்ப்பெயராக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும்
முத்தினை முதலாகிய மூர்த்தியை
வித்தினை விளைவாய விகிர்தனைக்
கொத்தலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனைத் தொழ நீங்கு நம்மல்லலே (170-2)
என்று நாவுக்கரசரும்
எம்பெருமான் உனையே நினைந் தேத்துவன் எப்பொழுதும்
வம்பமருங் குழலா ளொரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம் பெருமான்
அன்பது வாயடி யேற்கவையட்டித் தரப்பணியே (20-7)
என்று சுந்தரரும் இவ்விறையைப் பாடுகின்றார். கோளி என்ற சொல்லின் பொருளை நோக்குமிடத்து தமிழ் லெக்ஸிகன், ஆல், அத்தி என்பனவற்றைப் பிங்கல நிகண்டி லிருந்து காட்டி, ” பூவாது காய்க்கும் மரம் என்ற பொருளையும் தருகிறது (vol | பக். 1203). கொழுமென் சினைய கோளியுள்ளும் என்ற நிலையில் கோளி என்ற சொல் பெரும்பாணாற்றுப் படையில் இடம் பெறுகிறது. இதற்கு உரை எழுதும் உ. வே. சா அவர்கள், கொழுவிய மெல்லிய கொம்புகளினிடத்தனவாகிய இழும் என்னும் ஓசையை யுடைய புறவினுடைய திரளுகின்ற சுற்றத் திரட்சியை உடைய பூவாமற் காய்க்கும் மரங்களில் விசேடித்தும் பழத்தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலா மரத்தை ஒக்க என்ற பொருள் எழுதுகின்றார். எனவே பூவாது காய்காக்கும் மரங்களுள் பலா சிறப்பாகக்கருதப்பட்டது என்பது தெரிகிறது. இந்நிலையில் இப்பெயரை நோக்கப் பூவாது காய்க்கும் மரத்தின் அடியில் இருந்த நிலையில் இவ்விறையைச் சுட்டும் நிலையில் கோளிலி எனப் பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அரசமரத்தின் அடியில் இருப்பதால் அரசிலி’ என்ற பெயர் அமைந்தது போன்று இப்பெயரும் நோக்கத் தக்கது.