கோமூத்திரிகை

சித்திரகவி வகைகளுள் ஒன்று; கோமூத்திரி எனவும்படும்.பெற்றம் நடந்துகொண்டே நீர் விடுகையில் அந் நீர்த்தாரை பட்ட நிலம்நெளிந்த வடிவுடைத்தாகக் காணப்படுமாறு போல, இம்மிறைக்கவியின் வரிவடிவுஅமைந்திருக்கும்; இரண்டிரண்டு அடியாக ஒரு செய்யுளை எழுதி (மேல் வரிஇரண்டடி, கீழ் வரி இரண்டடி) மேலும் கீழுமாக அமைந்த அவ்விரண்டுவரிகளிலும் எழுத்துக்களை ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளேதோன்றுவது இச்சித்திரகவி யாம்.‘பருவ மாகவி தோகன மாலையேபொருவி லாவுழை மேவன கானமேமருவு மாசைவி டாகன மாலையேவெருவ லாயிழை பூவணி காலமே’ என்பது பாடல்.‘ஆயிழை! வெருவல்! கன மாலையில் கனம்மாலை ஆசை விடா(து) மருவும்; பொருஇலா உழை கானம் மேவன; (ஆதலின்) இது பருவம் ஆக, அவர் பூ அணி காலம்’என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.ஆயிழாய்! அஞ்சாதே. செறிந்த மாலைப்பொழுதில் மேக வரிசைகள்திக்கெல்லாம் நீங்காது பொருந்தி மழை பெய்தலை மேவும்; ஒப்பற்ற மான்கள்காட்டில் திரிகின்றன. ஆதலின் தலைவர் மீண்டு வந்து நின்னைப் பூஅணியால்ஒப்பனை செய்யும் காலம் இதுவாதல் வேண்டும்” என்று பருவ வரவின்கண் தோழிதலைவன் கடிதின் வருவான் என்று தலைவியை ஆற்றுவித்தவாறு. (தண்டி.98)