கொள்ளம்பூதூர்

இன்றும் இப்பெயரிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். ஞான சம்பந்தர் இவ்வூரினை.
கொட்டமேகமழும் கொள்ளம்பூதூர் (264-1)
கோட்டக்கழனிக் கொள்ளம்பூதூர் (264-2)
குலையினார் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் (264-3)
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் (264-4)
கொன்றை பொன் சொரியும் கொள்ளம் பூதூர் (264-5)
ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர் (262-6)
ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர் (264-7)
குரக்கினம் பயிலும் கொள்ளம்பூதூர் (264-8)
பருவராலுகளும் கொள்ளம்பூதூர் (264-9)
நீரகக் கழனிக் கொள்ளம்பூதூர் (264-10)
என அதன் நீர்வளம் நிலவளம் சுட்டிப்பாடுகின்றார். எனவே ஆற்றின் கரையில் உள்ள தலம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் ஆசிரியர் இது செய்யாற்றின் கரையில் உள்ளது (பக் -340) என்கின்றார். ஊர்ப்பெயர் பற்றிய பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. எனவே வெள்ளம் புதூர் என்ற பெயரே கொள்ளம் பூதூர் எனறு ஆயிற்றோ என்ற எண்ணம் எழுகிறது. திருநாவுக்கரசர் தேவாரமும் (516-1) இவ்வூர் பற்றிச் சுட்டுகிறது.