கொடுங்குன்றம்

இன்று பிரான் மலை என வழங்கும் பகுதி இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், பெயரிலேயே காரணத்தையும் கொண்டு அமைகிறது. வளைந்த மலைப்பகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கக் கூடும். பாரிவள்ளலின் பறம்பு மலையே இது என்பர். பறம்பு மலை என்ற பெயரே பிரான் மலை ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. பாடல் பெற்ற கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீதும் மற்றொரு கோயில் உள்ளது எனக் காண்கின்றோம். இம்மலையின் சிறப்பு ஞானசம்பந்தர் பாடல்கள் முழுவதும் மணக்கிறது குன்றம் என்ற பகுதியின் வளம் சிறப்பாக இவண் தெரிகிறது.
வானிற் பொலிவெய்தும் மழை மேகம் கிழித்தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற் கொடுங்குன்றம் 14-1
மயில் புல்கு தண்பெடையோடு உடனாடும் வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலை கொடுங்குன்றம் -14-2
சாரல்’ என்ற சொல்லினின்றும் மலைப்பக்கத்தில் இருந்த ஊர் என்பது தெளிவாகிறது. முதலில் திருக்கொடுங்குன்றம் என்று சுட்டப்பட்ட தலம், விஜய நகராட்சியில் பிரான் மலைச் சீமை என வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.