இன்று சேலம் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் தலம். திருச்செங்கோடு என்று வழங்கப் பெறுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. மலையின் சிவப்பு நிறம் காரணமாக பெயர் அமைந்தது என்பர்.
கொந்தணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே திரு ஞான – 107-1
மேலும் சிவபெருமான் திருவந்தாதியில் இவ்வூர், சிவன் மேய செங் குன்றூர் என்றும் (95) எனவும். கொண்டல்பயில் நெடும் புரிசைக் கொடிமாடச் செங்குன்றூர் என, பெரிய புராணத்திலும் அமைகிறது. இக்குன்றிலிருந்து பார்த்தால் காவிரியாறு தெரியும் என்ற எண்ணத்தை,
தெண்திரை நீர்த்தடம் பொன்னித் தடம்
கரையாங் கொங்கினிடை
வண்டனலையும் புனற் சடையார் மகிழ்
விடங்கள் தாழுதணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசைக் கொடிமாடச்
செங்குன்றூர்’
என்ற சேக்கிழார் கருத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம். செங்குன் றூர் என்ற மலைநாட்டு வைணவத் தலம் அன்று சிறப்புற்றிருந்தது என அறியும் போது,அந்தச் செங்குன்றூரினின்றும் இதனைத் தனிப்படுத்த, இதனைக் கொடிமாடச் செங்குன்றூர் எனச் சுட்டினரோ எனத் தோன்றுகிறது. நம்பியாண்டார், நீடு தென்றல் வீசும் பொழில் செங்குன்றம் மேய விறன் மண்டலனே எனப்பாடும் நிலை (திருத்தொண்டர்-6) திருச்செங்குன்றமே குன்றூர் ஆகியதோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. நாகவடிவாக இம்மலை இருப்பதால், நாககிரி’ என்ற பெயரும் இதற்கு அமைகிறது.