கொச்சகக் கலிப்பா (1)

தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் முதலும் முடிவும்வருதலின்றி இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடி பல வந்தும், தரவுதாழிசை தனிச்சொல் சுரிதகம் சொற்சீரடி முடுகியலடி என்னும் ஆறுஉறுப்பினைப் பெற்றும் ஏனை உறுப்புக்களில் வெண்பா மிக்குப் பிற பாஅடிகளும் வந்து வெண்பா இயலான் முடிவன கொச்சகக் கலிப்பாக்களாம்.‘காமர் கடும்புனல்’ (கலி.39) என்ற குறிஞ்சிக் கலிப்பாடல், ஐஞ்சீர்அடுக்கிய ஓர் அடியினையுடைய தரவு, அடுத்து ஐஞ்சீர் முதலடிக்கண் வந்தவெண்பா, அடுத்து முதலடி ஆசிரிய அடியாக வந்த வெண்பா, அடுத்து ஒருவெண்பா, தனிச்சொல், பேரெண், இரண்டு தாழிசை, கொச்சகம், தனிச்சொல்,முதலடி அறுசீர் முடுகியலும் அடுத்த அடி ஐஞ்சீர் முடுகியலும், ஏனையஅடிகள் அளவடியும் பெற்ற ஆறடி ஆசிரியச் சுரிதகம் – என்றஉறுப்புக்களையுடையது. ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்குவந்தாற் போலக் கொச்சகக்கலிக்கு வெண்பா உறுப்பு மிக்கு வரும். (தொ.செய். 148. இள.)