கச்சினம் என்று இன்று வழங்கப்படும் ஊர். தஞ்சை மாவட்டத் தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இந்திரன் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டு அதை அப்புறம் எடுத்து வைக்கும் போது அவன் கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே கைச்சின்னம் எனப் பெயர் பெற்றது என்பது இப்பெயர் குறித்த எண்ணம். தற்போது கச்சினம் என வழங்கப்படுகிறது என்ற கருத்து இவ்வூர் பற்றி அமையக் காண்கின்றோம். எனினும் இடைக் காலத்திலேயே கச்சினம் என்ற பெயரினைக் கல்வெட்டு கள் காட்டுகின்றன. இக்கோயிலில் அமையும் கல்வெட்டுகள் இவ் வூர்ப்பெயரினை முதலில் கச்சினம் என்றும் பின்னர் கச்சினப்பற்று என்றும் சுட்டுகின்றன எனவே கைச்சினம் என்ற இறைபற்றியன எண்ணம் காரணமாக உண்டான பெயர் பின்னர் கச்சினம் என்று ஆயிற்றா அல்லது கச்சினம் என்ற பழைய பெயர் இடை யில் கைச்சினம் என்று ஆயிற்றா எனப் பார்க்க, எளிமைப்படுத்து தல் மக்கள் வழக்கில் பொதுவான நிலை என்ற நிலையில் காண, கைச்சினமே முதல் பெயர் பின்னர் கச்சினம் என்று ஆயிற்று எனக் கொள்ளலே பொருத்தமாகிறது. கைச்சினம் பற்றிய வேறு காரணங்கள் அறியக் கூடவில்லை. எனவே பிறவிளக்கமும் தெளிவுறவில்லை. கண்ணுதலான் மேவியுறைகின்ற கோயில் கைச்சினம் (181-9) என்பது மட்டுமே சம்பந்தர் பாடல் தரும் விளக்கம்.