உதியன் என்னும் வள்ளல் வாழ்ந்த ஊர் குழுமூர், இவ்வள்ளல் இரவலர்க்கு உணவு அளிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தான். ஆகையால் அவன் அட்டிலில் இரவலரின் ஆரவாரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது என்றும் தெரிகிறது. சிறந்த பசுக்களையுடைய நிலப்பரப்பினையுடைய குழுமூர் என்று சங்க இலக்கியம் கூறுவதால், இவ்வூர் நிலப்பரப்பில் பசுக்கள் குழுமியிருந்தன என்று தெரிகிறது. இவ்வாறு குழுமியிருந்த காரணத்தால் குழுமூர் எனப்பெயர் பெற்ற ஊராக எண்ண இடமளிக்கிறது.
“பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த
நல்லான் பரப்பின் குழு மூராங்கண்
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில்போல ஒலிஎழுந்து” (அகம் 168:4 7)
இன்றும் ஊர்ப்புறத்தே மாடுகளைக் கூட்டமாக மடக்கி வைக்கும் பொது இடத்திற்கு மந்தைவெளி என்னும் பெயருள்ளமை ஒப்பு நோக்கத்தக்கது.