குற்றெழுத்து (உயிர்) ஐந்தாவன அ இ உ எ ஒ என்பன. இவற்றுள் முதல்
மூன்றும் சுட்டு இடைச்சொல்; எகரம் வினாஇடைச்சொல்; ஒகரம் ‘ஒப்பு’ என்ற
பண்பின் பகுதி யாய்த் தனித்து வாராது என்ப.
இவை பெயரோ வினையோ ஆகாமல் இடைச்சொல்லாகப் பெயர்ச்சொல்லைச் சார்ந்து
நின்றே சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்துதலானும், ஒகரம்
ஒப்புப்பண்பின் பகுதி என்பது எல்லார்க்கும் உடன்பாடு அன்மையானும், இவை
மொழிநிரம்புதல் இல்லை என்பது. ‘ஐந்தும் மொழி நிறைபில’ எனவே, நான்கு
இடைச்சொல்லாய் மொழி நிறைக்கலாம் என்பதும் கருத்தாம். (தொ. எ. 44 நச்.
உரை)