குற்றியலுகர ஈற்றுச் சொற்களெல்லாம் பெரும்பாலும் அவ்வழிக்கண்
இயல்பாக முடியும்.
எ-டு : நாடு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது,
குரங்கு கடிது – என வல்லொற்றுத் தொடர்மொழி நீங்கலாக ஏனையவை இயல்பாகப்
புணரும்.
வல்லொற்றுத் தொடர்மொழி கொக்குக் கடிது என வருமொழி முதலில் வரும்
வல்லெழுத்து இடையில் மிக்குப் புணரும்.
குற்றியலுகர ஈற்று வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : கிடந்தது குதிரை, கரிது குதிரை
குற்றியலுகர ஈற்று நிலைமொழி வன்கணம் வர இருபெய ரொட்டுப்
பண்புத்தொகைபடப் புணருமிடத்து, இனஒற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று
முடிதலும், இயல்புகணம் வர அவ்வாறு புணருமிடத்து இனஒற்று மிகுதலும்
உண்டு.
எ-டு : கரடு + கானம் = கரட்டுக்கானம்; குருடு + கோழி =
குருட்டுக் கோழி; கரடு + வழி = கரட்டு வழி; குருடு + மனிதன் =
குருட்டு மனிதன்.
சிறுபான்மை அன்சாரியையும் அக்குச்சாரியையும் பெறுதலு முண்டு.
எ-டு : பார்ப்பு + குழவி
> பார்ப்பு + அன் + அக்கு +
குழவி = பார்ப்பனக்குழவி
குற்றியலுகர ஈற்றுச் சொற்களுள், மெல்லொற்று வல்லொற் றாய் ஐகாரமும்
வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் உள; மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும்
வல்லொற்றும் பெறுவனவும் உள.
எ-டு : ஓர்யாண்டு + குழவி = ஓர்யாட்டைக் குழவி பண்டு + சான்றோர்
= பண்டைச் சான்றோர்
இயல்புகணம் வந்தவழி, மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் மாத்திரம்
பெற்று முடிவனவும் உள.
எ-டு : ஓர்யாண்டு + யானை = ஓர்யாட்டை யானை ஐயாண்டு + எருது =
ஐயாட்டை யெருது
வினையெச்சத் தொடர்க்கண் வன்தொடர்க்குற்றியலுகர ஈறு வன்கணம் வரின்
மிக்குப் புணரும்.
எ-டு : செத்துக் கிடந்தான், நட்டுப் போனான்
மென்தொடர்க்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாக வருமொழி
வன்கணத்தொடு புணரும்.
எ-டு : இருந்து கொண்டான், வந்து போயினான்
ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்களாகிய ஆங்கு ஈங்கு
ஊங்கு யாங்கு யாண்டு ஆண்டு ஈண்டு – முதலியனவும், அங்கு இங்கு உங்கு
எங்கு – முதலியன வும், மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களா
யினும் வன்கணம் வந்துழி மிக்குப் புணரும்.
ஆங்குச்சென்றான்…. யாங்குச்சென்றான்…. ஈண்டுச் சென்றான்….
அங்குச் சென்றான்….. முதலாகப் புணர்தல் காண்க.
ஆண்டு என்பது இடைச்சொல்லாயின், ஆண்டுச் சென்றான் என வல்லெழுத்து
மிகும். ஆள் என்ற பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலச் செய்து என்னும்
வாய்பாட்டு வினையெச்ச மாயின், ஆண்டு கொண்டான் என இயல்பாக முடியும்.
(தொ. எ. 425 – 429 நச்).
உண்டு என்பது உண்மைத்தன்மைப் பண்பினை உணர்த்திய-வழி, நாற்கணமும்
வரினும் உண்டு பொருள், ஞானம், யாழ், ஆடை என இயல்பாயும், பகரம்
வருமொழிமுதலில் வருவழி,
உண்டு பொருள், உள்பொருள் என இருமுடிவும் பெற்றும் புணரும்.
உள்பொருள் என ஓசை பிளவுபடாது கூறின் பண்புத் தொகை யாம்; ஓசை
இடையறவுபடச் சொல்லின் (‘உண்டு பொருள்’ என்பது பொருளாதலின்) குறிப்பு
வினைமுற்றுத் தொடராம். (நச். உரை).