தனிநெடில், ஆய்தம், (மெய்யினை ஊர்ந்த) உயிர், வல்லின மெய்,
மெல்லினம், இடையினமெய் என்னும் இவற்றுள் ஒன்று ஈற்றயல் எழுத்தாக வர,
சொல்லின் இறுதியில் வல்லினப் புள்ளியை ஊர்ந்து வரும் உகரம், தன் ஒரு
மாத்திரையின் குறைந்து அரைமாத்திரையாக ஒலித்தலின் குற்றியலுகரமாம்.
ஈற்றயலெழுத்தை நோக்கிக் குற்றியலுகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் –
ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம் – உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் –
வன்தொடர்க் குற்றியலுகரம், மென் தொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க்
குற்றியலுகரம் என ஆறு வகைப்படும். இவற்றுள் நெடிற்றொடர்க் குற்றிய
லுகரம் ஒன்றே ஈரெழுத்தொரு மொழியாக வரும்; ஏனைய எல்லாம் பல
எழுத்துக்களாலாகிய மொழியாக வரும்.
குற்றியலுகரம் ஆறு வல்லின மெய்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு
வருதலின், ஆறு வகையும் ஆறு ஈற்றெழுத்தொடும் உறழக் குற்றியலுகரம் 36
என்பர்.
எ-டு : நாகு, கஃசு, கவடு, பத்து, சென்று, மார்பு என ஆறு தொடர்க்
குற்றியலுகரங்களையும் முறையே காண்க. (நன். 94)