குற்றியலுகரம் (1)

இது தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்று. இது
தனக்கெனத் தனிப்பட்ட முறையில் பிறப்பிட மின்றித் தான் ஏறிநிற்கும்
மெய்யின் பிறப்பிடமே தனக்குப் பிறப்பிடமாகக் கோடலின், ஒரே எழுத்தாகிய
குற்றியலுகரம் பிறப்பிடம் நோக்கி ஆறாகக் கொள்ளப்படுகிறது. இது
தமிழிலும் மலையாளத்திலுமே உள்ளது. குற்றியலுகரம் ஏழு தொடர்க்கண் வரும்
எனவும், அதனால் நாற்பத்திரண்டு ஆகும் எனவும், ஆறு தொடர்க்கண் வரும்
எனவும், அதனால் முப்பத்தாறு ஆகும் எனவும் கூறுவன ஏற்புடையன அல்ல.
தொடர்நோக்கிக் குற்றியலுகரத்தை ஆறாகக் கோடலே அமையும். அஃது
ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர் மொழி, இடையொற்றுத்தொடர்மொழி,
ஆய்தத்தொடர் மொழி, வல்லொற்றுத்தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி என
எடுத்துக்கூறி விதி கூறுதற்குப் பயன்படு கிறது. மொழிமுதற்கண் வரும்
குற்றியலுகரத்தையுடைய சொல் கிளைப்பெயராகிய நுந்தை என்பது. இம்
மொழிமுதற் குற்றியலுகரம் ஒன்றே. இது நுந்தை என்ற பெயர்க்கணன்றி,
வினைக்கண் வாராது. இக்குற்றியலுகரம் புள்ளி பெறுத லின்று.
தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது புள்ளியீறு
ஆகும். அதற்கு மாத்திரை அரை.
அல்வழி வேற்றுமைப் பொருண்மைக்கண் வரும் தொடர்- மொழிக்
குற்றியலுகரம் இருமொழிக்கு இடையே வருவழி, அது முற்றியலுகரமாம். ஆயின்
வல்லொற்று இறுதிக் குற்றியலுகரம் வருமொழிக்கண் வல்லெழுத்து வருவழித்
தன் பழைய அரை மாத்திரை அளவிற்றாகவே, செக்குக்கணை – சுக்குக்கொடு
முதலிய சொற்றொடர்களில் நிற்பதுமுண்டு.
வல்லொற்றுத்தொடர்மொழி ஈற்றுக் குற்றியலுகரம் வல் லெழுத்து
முதன்மொழி வருமொழியாகியவழிக் கால் மாத்திரை பெறும் எனவும், ஏனைய
அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அரைமாத்திரை பெறும் எனவும் கூறுவது
தொல்காப்பியனார் கருத்துக்கு ஏலாது. பன்மொழிப் புணர்ச்சி யாகிய
செய்யுளில் முற்றியலுகரம் குற்றியலுகரம் இரண்டனைக் கொண்டும் நேர்பு
நிரைபு அசைகளை அமைத்துக் கொண் டமை, குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்
ஒருமாத்திரை பெறும் இயைபை நோக்கியே ஆம்.
பெயர்ச்சொற்களுள் அரைமாத்திரை பெறும் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள்
அச்சொல்லே ஏவல்வினையாயின் அவை ஒருமாத்திரை பெறும் முற்றியலுகர ஈற்றுச்
சொல்லாம். பெருக்கு – கட்டு – காது – என்பன பெயராயின், குற்றுகர ஈறாய்
அரைமாத்திரை பெறும் ஈற்றெழுத்துடையனவாம். குற்றிய லுகர ஈறு ஏவல்
வினைக்கண் வாராது என்பது தொல்காப்பி யனார் கருத்தாம்.
குற்றியலுகரம் மெய்யீறு போலத் தன்மீது வருமொழிமுதல் உயிர் ஏற இடம்
கொடுக்கும். முற்றியலுகரஈறு கெடும் என்று கூறும் தொல்காப்பியனார்
ஓரிடத்தும் குற்றியலுகரம் கெடும் என்று குறிப்பிடவில்லை. எனவே,
குற்றியலுகரம் மெய்யீறு போல அரைமாத்திரை கொள்வதனொடும் புள்ளி பெறுவத
னொடும் அமையாது, மெய்யீற்றின் செய்கை பெற்றுப் புள்ளியீற்றுள்
அடக்கப்பட்டது.
குற்றியலுகர ஈற்றில் அவ்வுகரம் கெட நின்ற மெய்யீற்றின் மீது உயிர்
ஏறி முடியும் என்று கூறுவதும் சாலாது. மொழியிறுதி யில் வாராத க் ச் ட்
த் ப் ற் என்ற வல்லினமெய்கள் ஆறனையும் ஈற்றில் கொள்ள உடன் இணைத்துக்
கொள்ளப்பட்ட எழுத்தே குற்றியலுகரம். மெய்யின் தானத்தில் வந்துள்ள
குற்றியலுகரத்தின் நிலையும் மெய்யெழுத்துக்களின் நிலையே.
குற்றியலுகரம் மெய்க்குரிய அரைமாத்திரை அளவே ஒலித்த லின், ஆண்டு
உகரஒலி அம்மெய்யெழுத்தினைத் தெரிவிக்கும் துணையே நின்றது. ஒலித்தல்
எளிமை கருதியே, ஏழ் உண் தின் வவ் மண் பல் எண் முதலிய சொற்கள் ஏழு
உண்ணு தின்னு வவ்வு மண்ணு பல்லு எண்ணு முதலிய சொற்களாகத் திரிதலை
இன்றும் காண்கிறோம்.
குற்றியலுகரம் தொடர்மொழிக்கண் ஒருமாத்திரை பெற்று முற்றியலுகரம்
போல நிற்றலினால்தான், செய்யுளில் அசைக் குரிய எழுத்துக்கள் உயிர் –
உயிர்மெய் – குற்றியலுகரம் – என மூன்றாகக் கொள்ளப்பட்டுள்ளன.
செய்யுளாயினும் சீரிடை அடுத்த சொல்லொடு சேராது ஓசை
இடையறவுபட்டவழிக் குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்றே யாகி அலகு பெறாத
நிலையைக் காண்கிறோம். இது பிற்கால நிலை.
‘குன்று கோடு நீடு’ – மூவசைச்சீர்
சீர் ஈற்றில் வரும் குற்றுகரம் முற்றுகரம்ஆகி அலகு பெறுதலை யும்
காண்கிறோம்.
‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ – பருந்து: முற்றுகர ஈறு.
குற்றியலுகரத்தைத் தொல்காப்பியனார் உயிரீற்றில் அடக்கவில்லை. ஈற்றுக்
குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது மெய்யீறு போலக் கொள்ளப்பட்டு
உயிரேற இடம் கொடுக்கும் என்பதே தொல். கருத்து.
நன்னூலார் குற்றியலுகரத்தை உயிரீற்றுள் அடக்கி அக்குற்றிய லுகரம்
உயிர்வரின் கெடும் என்றார். (வே. ரெட்டியார் ஆய்வுக்கருத்து)