குற்றியலுகரம் முப்பத்தாறு

குற்றியலுகரம் முப்பத்தாறு என்றது என்னெனின், ஒருமதம் குறைந்த
ஆனைமுகக்கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற்போல, இலக்கணை என்னும் விதி
பற்றிக் கூறினார் என்க. நெடில் ஏழும், ஆய்தம் ஒன்றும், மொழி இடையிலும்
இறுதியிலும் வாராத ஒளகாரம் நீங்கிய உயிர் பதினொன்றும், வல்லொற்று
ஆறும், மெல்லொற்று ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரஒற்று நீங்கிய
இடையொற்று ஐந்தும் ஆக முப்பத்தாறும் ஈற்றயல் எழுத்தாக வர, அவற்றை
நோக்கக் குற்றியலுகரம் முப்பத்தாறு என்ப. (நன். 94 இராமா.)
‘ஆனைமுகத்தானை மும்மதத்தன் எனல்’ காண்க.