குற்றியலுகரம் புணரும் முறை

ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். அதுவும்
புள்ளியீற்றுள் அடங்கும். குற்றியலுகரம் புள்ளியீறு போல உயிரேற
இடம்கொடுக்கும் என்பதே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், இ.வி.
ஆசிரியர், எ. ஆ. ஆசிரியர் ஆகியோர் கருத்தாம். நன்னூலார் உயிர் வரின்
நிலைமொழியீற்றுக் குற்றிய லுகரம் கெடும் என்றார். குற்றியலுகரமும்
முற்றியலுகரம் போலக் கெடும் என்பதே சிவஞானமுனிவர் கருத்தாம்.
நாகு + அரிது = நாகரிது. நாகரிது என்புழி, முன்னர்க் குற்றுகர
ஓசையும் பின்னர் உயிரோசையும் பெற்று, அவ்விரண்டும் கூடிநின்றல்லது
அப்பொருள் உணர்த்தல் ஆகாமையின், உயிரேறுங்கால் குற்றுகரம் கெட்டுப்
போக நின்ற ஒற்றின்மேல் உயிர் ஏறிற்று என்றல் பொருந்தாது. (இ.வி.
எழுத். 65 உரை)