குற்றியலுகரம் கெடுதல்

‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என நன்னூலார் நூற்பா
அமைத்தமை போலத் தொல்காப்பியனார் பொதுவிதி அமைத்திலர். அவர் நூறு
என்பதன் முன்னும் ஆறு என்பதன் முன்னும் முறையே ஒன்று முதலிய எண்களும்
ஆயிரமும் வந்து புணரின், நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் கெட, நின்ற
ஒற்றின்மேல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்றார். (நூறு+ ஒன்று =
நூற்றொன்று; ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்) ஒன்றினம் முடித்தல் என்பதனால்
ஏனைய குற்றியலுகரமும் உயிர்முதல் மொழி வரின் கெட, நின்ற ஒற்றின்மேல்
வருமொழி முதல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்பது பெற்றாம்.
குற்றியலுகரத்தின்மீது உயிரேறி முடியும் எனின், அங்ஙனமே
முற்றியலுகரத்தின் மீதும் உயிரேறி முடியலாம். அவ்வாறே ஒருவரும்
கூறிலர். குற்றியலுகரத்துக்கும் உயிர் என்னும் குறியீடு கொண்டமையின்,
ஒற்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறி முடிதல் பொருந்தாது. நாகரிது –
என்புழி, இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி பெறப்படாமையின், குற்றியலுகர
ஓசை இத்தொடர்க்கண் இல்லை. யகரம் வருவழி இகரம் உகரத்தின் மீது ஏறி
முடியும் என்னாது, உகரம் கெட, இகரம் குறுகிக் குற்றியலிகரமாகி வரும்
என்பதே ஆசிரியர்கருத்து. எனவே, குற்றியலுகரம் உயிர் வருவழிக் கெடுமே
அன்றி உயிரேற இடம் தாராது. (சூ. வி. பக். 40)
நூறு முன் மூன்று, நான்கு என்பன புணரும்வழிக் குற்றிய லுகரம்
கெட்டதாயின், நூற்ற் மூன்று – நூற்ற் நான்கு – என்றே அத்தொடர்
அமையும். ஆறு முதல் குறுகி ‘அறு’ என்று முற்றியலுகர ஈற்றது
ஆயினமையின், அவ்வுகரம் கெட்டது. குற்றியலுகரத்துக்கு உயிர் என்னும்
குறியீட்டைத் தொல். வழங்கவில்லை. தொடர்மொழியில் குற்றியலுகரம் முற்றிய
லுகரம் என்ற தொல். கருத்தை யுட்கொண்டால், குற்றிய லுகரம் கெடும் என்று
கருதற்கு இடன் ஏற்படாது – என்பன போன்ற கருத்துக்களால் சிவஞானமுனிவர்
கருத்து மறுக்கப் படுகிறது. (தொ. எ. 472, 469 நச்.) (எ. ஆ. பக். 176,
177)