ஈற்றயல் எழுத்தைச் சிறப்பாகக் கொண்டு, நெடில் 7-ஆய்தம் – ஒள
நீங்கலான உயிர் 11 – வல்லினம் 6 – மெல்லினம் 6 – வகரம் நீங்கலான
இடையினம் 5 ஆக 36 என்று தொகை கொள்வர். இம்முறையில் எகர ஒகரங்களொடு
வல்லுகரம் சேர்ந்துவரும் சொல்லின்மையால், அவையிரண்டையும் நீக்கக்
குற்றிய லுகரம் 34 ஆகும். ஆதலின் இம்முறை எண்ணிக்கையும் சாலாது.
தனிநெடில், ஆய்தம், உயிர், வலி, மெலி, இடை என்ற அறுவகைப்பட்ட
இவற்றைத் தொடர்ந்து கு சு டு து பு று என்ற ஆறு குற்றியலுகரங்களும்
வருதலின், குற்றியலுகரம் 36 என்ப. இடையெழுத்துக்கள் ஆறனுள் எந்த
எழுத்தையும் டு று என்ற எழுத்துக்கள் தொடராமையின், இவற்றை நீக்கக்
குற்றியலுகரம் முப்பத்து நான்கே ஆதலின், இம்முறையில்
குற்றியலுகரத்தைக் கணக்கிட்டு 36 எனலும் சாலாது.
குற்றியலுகரம் தான் ஊர்ந்து வரும் வல்லினமெய் பற்றியோ, தன்முன்
உள்ள எழுத்தின் இனம் பற்றியோ ஆறு என்ற கணக்கிடுதலே பொருத்தமானதாம்.
குற்றியலுகரம் எழுத்து வேற்றுமையால் ஆறு; இடவேற்றுமையால் ஆறு என இவ்
விரு திறனையும் உறழ்ந்து கூறாமல் தனித்தனியாகக் கூறுதலே தக்கது. (எ.
ஆ. பக். 163).