குற்றியலிகரம் ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்’தாதல்

குற்றியலிகரம் தனிமொழிக்கண்ணே யன்றி, நிலைமொழி வருமொழியொடு
புணர்தல் இயன்ற நிலைமையாகிய தொடர் மொழிக்கண்ணும் வந்து பொருந்துதல்
உடையதாம். இங்ஙனம் வருவது இருமொழிக் குற்றியலிகரம் ஆம்.
குறுகுதல் – அணுகுதல், வந்து பொருந்துதல்.
குற்றியலிகரம் ஆய்தம் போல வேறெழுத்தாவதாம்; அன்றி, ஒரு மாத்திரை
பெற்று நின்ற இகரம், மகரக்குறுக்கம் போல, ஒரு காரணம் பற்றி
அரைமாத்திரையாய்க் குறைந்து நின்றதன்று. (சூ. வி. பக். 27, 28)