குற்றாலம்

இன்றும் குற்றாலம் என்றே வழங்கப்பட்டு வரும் ஊர் பாண்டிய நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் பட்டினத்தார் போன்ற பிறரும் இத்தலத்து இறையைப் புகழ்கின்றனர். குருமணிகள் வெயிலெறிக்கும் குற்றாலம் எனப்பாடுகின்றார் சேக்கிழார் (கழறி-106). சம்பந்தர் தம் ஒவ்வொரு பாடலிலும் குற்றாலத்தின் இயற்கை வளத்தைக் காட்டுகின்றார். இன்றும் இவ்வளத்தை நாம் நேரிடையாகக் காணமுடிகிறது.
வம்பார் குன்றந் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோல வண்டி யாழ் செய்குற்றாலம் 99-1
செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குற்றாலம் 99-3
பக்கம் வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின் கோட்டுப்பைங்கனி தூங்கும் குற்றாலம் 99-4
ஒரு ஊரின் பல பெயர்கள் அவ்விடத்தின் பெரும் சிறப்புக்குச் சான்று பகர்கின்றன என்ற ஊர்ப்பெயர் ஆய்வு உண்மைக்கு, குற்றாலம் பற்றிய 21 பெயர்களும் ஒரு சான்றாகின்றது. குறும் பலா தான் இங்குள்ள தலவிருட்சம் எனினும் கோயில் பெயர் குற்றாலம் என்று அமைகிறது. குற்றாலம் என்னும் ஒருவகை ஆலமரத்தைத் தல விருட்ச மாக உடைமையால் இப்பெயர் பெற்றது குறும்பலா என்னும் ஒருவகை மரத்தைத் தலவிருட்சமாக உடைமையால் அம்மரத் தாலேயே இக்கோயில் குறும்பலா என்றும் பெயர் எய்திற்று என்ற கருத்தும், அமைகிறது. மேலும்
திரிகூடமலை மூன்று சிகரங்களையுடைய மலை காரணமாக அமைந்த பெயர். ! செண்பசக்கா மலையில் செண்பக மரங்கள் மிகுதி காரண மாகப் பெற்ற பெயர். குற்றாலம் – இறைவன் குற்றாலம், கோவிதாஸ், சமருகம் என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே எழுந்தருளி இருத்தலால் அம்மரத்தின் பெயரே தலத்தின் பெயர் ஆயிற்று. குறும்பலா குறும்பலாவின் அடியின் ஈசன் கோயில். 3 + எனப் பல நிலைகளில் குற்றாலம் பெயர் பெற்ற நிலையை அறிய இயலுகிறது. இதனை நோக்க, ஒரு இடத்தின் பல சிறப்புகளும் பல பெயர்களை அந்தந்த குறிப்பிட்ட இடத்திற்கு அளிக்க, இறுதியில் அவ்வனைத்துப் பெயர்களும் அந்த ஊர் முழுமையும் குறிக்கும் நிலை, ஊர்ப்பெயர்களின் ஒரு வகை முறை எனல் பொருந்தும். இதன் 21 பெயர்களாக, மது உண்டான் உயிர் மீட்ட புரம், பிதுர் கண்டன் தீர்த்த புரம், பவர்க்க மீட்டபுரம், வேழம் பூசித்த புரம், வேடன் வலம் செய்த புரம், சிவத் துரோகம் தீர்த்தபுரம், வசந்தப் பேரூர், கங்கை வந்த புரம், நதி முன்றில் மாநகரம், முனிக்குருகும் பேரூர், குறும்பலா வேத சக்தி பீட புரம், ஞானப்பாக்கம், நன்னகரம், திருநகரம், விசேடபுரம், சிவ முகுந்தபுரம், முத்துவேலி, புடார்ச்சுனம், தேவகூடபுரம் என்பவற்றைத் திருக்குற்றலத் தலவரலாறு தருகிறதாகக் காண் கின்றோம். இங்குக் குற்றாலம், திரிகூடமன மலை போன்ற பெயர்களைக் காண இயலவில்லை. எனவே, பிற்காலப் புராணக் கதை களின் இணைப்பாக இவற்றைக் கொள்ளலாம். திருக்குற்றாலத் தல வரலாறு நூல்,குற்றாலம் என்ற பெயர் வந்த காரணம் என, திருக்குற்றாலத்தில் முழு முதலிறைவன் உமா தேவியினிடத்து உலகமெல்லாம் உண்டாவதற்குக் குற்றாலம் கோவிதாரம் சமருகம் என்ற மூன்று பெயருடைய வரையாத்தி மரநிழலிலே எழுந்தருளி இருத்தலால் அம்மரப் பெயரில் ஒன்றாகிய குற்றாலம் என்பது குற்றால மலையின் பெயராகி, பின் இறைவன் பெயராகி, பின் இத்தலத்துக்கும் மக்களுக்கும் பெயருமாயிற்று.