குறுக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இவ்வூர் அமைகிறது. அட்ட வீரட்டத் தலங்களுள் காமனை எரித்த தலமாதலின் திருக் குறுக்கை வீரட்டம் என்று வழங்குகிறது என்ற எண்ணம் உண்டு. அப்பர் இக்கோயில் இறைவனை அடைவுத் திருத் தாண்டகம் என்ற பகுதியுள் பாடுகின்றார். வீரட்டம் என்ற முடிவு கொண்ட தலப்பெயர்களைச் சுட்டும் போது, குறுக்கை வீரட்டத்தையும் சுட்டுகின்றார். வீரட்டம் கோயில் என்பதும், குறுக்கை என்பதே ஊர்ப்பெயர் என்பதும் தெளிவாகிறது. இதனையே சேக்கிழாரும் குறுக்கைப் பதி என்று அமைக்கின்றனர் குறுக்கைக் குடி என்ற தொரு குடிப் பெயர் அமைகிறது. சங்க இலக்கியத்தில் அதுவே இப்பெயர்க் காரணம் எனலாம் (34-288). குறுக்கை என்னும் ஒரு வகைத் தாவரம் பற்றிய எண்ணம் அதுவே அப்பெயருக்குரிய காரணமோ எண்ணம் எழுப்புகிறது. மேலும், கடுக்கா மரம் தலவிருட்சமாதலின் கடுவனம், இறைவன் அம்மை யாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடம் காரணமாக யோகீசபுரம், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம், இலக்குமி யினது நடுக்கத்தைப் போக்கியதால் கம்பகரபுரம் ; தீர்க்கலாகு முனிவர் இத்தலத்து இறைவனை அபிடேகித்ததற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.