குறுக்கைப் பறந்தலையில் அன்னி என்னும் மன்னன் திதிய னோடு போரிட்டு, அவன் காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. போர் நடை பெற்ற அந்தப்போர்க்களம் அமைந்த ஊர்ப்பெயராகிய குறுக்கை என்பதனோடு இணைந்து குறுக்கைப் பறந்தலை எனப் பெற்றது, வேளாளர் குலத்தனரில் ஒருபிரிவினர் குறுக்கையர் குடியினர். குறுக்கையர் குடியினர் வாழ்ந்த நிலப்பகுதி குறுக்கைஎனப் பெயா் பெற்றிருக்கலாம் என எண்ணுவது பொருத்தமாக இருக்கலாம், குறுக்கை என்னும் பெயருடன் தஞ்சைமாவட்டத்து மாயவரம் வட்டத்தில் ஒன்றும், திருச்சி மாவட்டத்தில் லால்குடி, வட்டத்தில் ஒன்றும் ஆக இரண்டு ஊர்கள் உள்ளன.
“அன்னிக் குறுக்கைப் பரந்தலை திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைந்த ஞான்றை: (அகம், 45 ; 9 1)
“அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல” (ஷே. 145 : 11 13)