தனிக்குற்றெழுத்தை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் ஒற்றுக்கள்
வருமொழி முதற்கண் உயிர்வரின் இரட்டும். இங்ஙனம் ஒற்று இரட்டுவன ஞகார
ஙகார ரகார ழகாரம் ஒழிந்தன. ஈற்றில் வரும் மெய்கள் ஞ ண ந ம ன ய ர ல வ ழ
ள என்ற பதினொன்றாம். இவற்றுள் ஞகாரம் உரிஞ் என்ற ஒரே மொழிக்கண்ணும்,
நகாரம் பொருந் – வெரிந் – என்ற இரு மொழிக்கண்ணும் அன்றி வாரா. இவை
குற்றொற்று அல்ல. ர ழ என்பன குற்றொற்றாக வாரா. எனவே, ண ம ன ய ல வ ள
என்ற ஏழு மெய்களுமே தனிக்குறிலை அடுத்து மொழி யீறாய் வரின்
இரட்டும்.
எ-டு : மண் + அரிது = மண்ணரிது; கம் + அரிது = கம்மரிது; பொன் +
அகல் = பொன்னகல்; மெய் + அருமை = மெய்யருமை; கல் + அரிது = கல்லரிது;
தெவ் + அரிது = தெவ்வரிது; கள் + அருமை = கள்ளருமை.
இரட்டுதல் இருவழிக்கண்ணும் ஆம். (தொ. எ. 160 நச். உரை)