குருந்தங்குடி

ஞானசம்பந்தரின் பாடலில் திருவூர்க்கோவை என்ற பதிகத் தில் (175-10) குடி என்ற தலப்பெயர்களைத் தரும் நிலையில் இப்பெயரும் இடம் பெறுகிறது. குருந்து என்ற மரம் சங்க நூல்களிலேயே சுட்டப்படும் ஒன்று. இதன் பூ நறுமணமுடையது. எனவே இதனைத் தலையில் அணியும் நிலையையும் காண்கின்றோம்.
குருந்தங்கண்ணிக் கோவலர்
பெருந் தண்ணிலைய பாக்கமு முடைத்தே – ஐங்குறு -439
இவற்றை நோக்க, குருந்த மரங்கள் நிறைந்த பகுதியில் உள்ள மக்கள் வாழ் குடியிருப்பு என்ற நிலையில் இவ்வூர்ப் பெயர் அமைந்தது எனக் கருதலாம். புனல் சூழ் குருந்தங்குடி என்று இவ்வூரின் நீர்வளம் மட்டும் சுட்டுகின்றார் சம்பந்தர். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் குருந்தங்கோடு என்றதொரு ஊர்ப்பெயர் இதனைப் போன்று அமைகிறது.