குருகாவூர்

இன்று திருக்கடாவூர் எனச் சுட்டப்படும் இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். கோயில் பெயர் வெள்ளடை. பொழில்கள் நிறைந்தது இவ்வூர் என்பதை. பல விண்ணமர் பைம்பொழில் (382-1), விரை கமழ் தண்பொழில் (382-2) விளங்கிய தண்பொழில் (382-3) விரி தரு பைம்பொழில் (382-5) தேன் மலர் மேவிய தண்பொழில் (382-6) என்ற அடைகள் விளக்குகின்றன. எனவே குருகுகள் நிறைந்த சோலை என்ற பொருளில் குருகாவூர் எனப் பெயர் அமைந்திருக்கலாம். பொழில்களின் நிறைவைச் சம்பந்தர் தர, சுந்தரர் இங்குள்ள நீர் நிலை அழகையும் காட்டுகின்றார்,
வாவியிற் கயல் பாயக் குளத்திடை மடைடதோறும்
காவியும் குவளையும் கமலஞ் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் 29-2
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் 29-5
வளங்கனி பொழில் மல்கு வயலணிந்தழகாய
விளங்கொளி குருகாவூர் 29-10
மேலும் ஞானசம்பந்தர் தம் திருவூர்க் கோவையுள் ஊர் என்று முடியும் ஊர்ப்பெயர்களை உரைக்கின்றார் (175). அதனுள் குரு காவூர் என்பது இல்லை. எனினும் குருகாவையூர் என்ற ஒன்றைச் சுட்டுகின்றார். இரண்டும் ஒன்றாக இருக்கலாம். அழகான ஊர் என்பது ஐ என்பதால் சுட்டப்பட்டிருக்கலாம்.