இன்றும் இப்பெயருடனேயே வழங்கப்படும் ஊர், வட ஆர்க் காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இவ்வூர். குரங்கணில் முட்டம் என்ற பெயருக்கு, குரங்கு அணில் முட்டம் என்ற மூன்றும் தரிசித்த தலம் எனப் புராணக் கதை கூறுவர். எனினும் விலங்குப் பெயரால் ஊர்ப்பெயர்கள் அமைவது உண்டு என்ற பொது விதி நோக்கிப் பார்க்க, குரங்கு பெயரால் இவ்வூர், பெயர் பெற்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. முட்டம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் இடம், ஊர், காகம் என்ற முப்பொருட்களையும் தருகிறது. எனவே குரங்குகள் மிகுந்த இடம் என்ற பொருளில் குரங்கணிமுட்டம் பெயர் பின்னர், குரங்கணில் முட்டம் என்று புராணக்கதை செல்வாக் கில் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் சம்பந்தரின் தேவாரம் இப்பகுதியை மிகவும் வளப்படுத்தும் சோலைகள் நிறைந்து இருந்ததொரு நிலையில் காட்டுவது. இப்பெயர்க் காரணத்திற்குப் பொருத்தம் தருகிறது. முட்டம் என்பது பிற ஊர்ப்பெயர்களில் பொதுக்கூறாக இருப்பதும் இவண் சுட்டத் தக்கது. (இரணிய முட்டம்).