குன்றை அடுத்துள்ள ஊர் என்ற நிலையில் குன்றூர் என்ற ஊர்ப்பெயர் தோற்றம் பெற்றிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. இப்பெயருடன் ஊர்கள் ஒன்றற்கு மேற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. வேளிர்கள் வாழும் நகரமாகிய கீழ்கடற்கரையிலுள்ள குன்றூரும் ஒன்று, நீலகிரி மலையில் இப்பொழுது குன்னூர் என்ற பெயருடன் வழங்கும் ஊரும் ஒருகாலத்தில் குன்றூர் என்ற பெயருடன் வழங்கியதே. கிழார் என்னும் புலவரும் அவர் மகன் கண்ணனாரும் இவ் வூரினர் ஆகையால்தான், குன்றூர் கிழார் என்றும் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்றும்பெயா் பெற்றிருந்தனர். நற்றிணையில் 382 ஆம் பாடல் கண்ணத்தனாரும், புறநானூற்றில் 338ஆம் பாடல் ஓழாரும் பாடிய பாடல்களாகும். தொன்றுமுதிர் வேளிர் என்றும், குன்றூர் குணாது தண் பெரும் பெளவம் என்றும் இலக்கியங் கூறுவதை நோக்கும் பொழுது கீழ்க்கடற்கரையை அடுத்த குன்றூரே சங்ககாலக் குன்றூர் என்று எண்ண இடமளிக்கிறது.
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்றுமுதிர் வேளிர், குன்றூர் அன்னஎன்
நல்மனை நனிவிருந்து அயரும்
கைதூ வின்மையின் எய்தாமாறே” (நற். 280:6 10)
“கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பெளவம் அணங்குக தோழி!” குறுந். 164: 124)