யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டுயாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர்ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குணசாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச்சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும்,யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார்.இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றேசுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர்காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொருகருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்துவேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப.