அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் இகர ஈகாரங்கள் முதலாகிய
சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஏகாரம்
வரும்.
எ-டு : நர+இந்திரன் = நரேந்திரன்; உமா+ஈசன்= உமேசன்
அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் உகர ஊகாரங்கள் முதலாகிய
சொல் வரின், நிலைமொழியிறுதி யும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஓகாரம்
வரும்.
எ-டு : தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ உற்பத்தி = கங்கோற்
பத்தி. (மு. வீ. மொழி. 39, 40)
அகரஆகாரங்களில் ஒன்றன் முன்னர் இகரஈகாரங்களில் ஒன்று வந்தால்
ஏகாரமும், அவ்விரண்டில் ஒன்றன் முன் உகர ஊகாரங்களில் ஒன்று வந்தால்
ஓகாரமும்முறையே நிலைப்பத ஈறும் வரும்பத முதலும் கெடத் தோன்றுதல்
குணசந்தியாகும்.
எ-டு : சுர+ இந்திரன் = .சுரேந்திரன், நர + இந்திரன் =
நரேந்திரன்; தரா + இந்திரன் = தரேந்திரன், சர்வ + ஈசுரன் =
சர்வேசுரன்; உமா + ஈசன் = உமேசன், சித + இந்து= சிதேந்து;
அமல + உற்பவி = அமலோற்பவி, மகா + உதரம் = மகோதரம்; சுத்த +
உதகம் = சுத்தோதகம், ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன்; மந்திர + ஊகி
= மந்திரோகி, தாம + உதரன் = தாமோதரன்; தயா + உற்பத்தி = தயோற்பத்தி,
தயா + ஊர்ச்சிதன் = தயோர்ச்சிதன். (தொ.வி. 38 உரை)