குடந்தைவாயில் என்றும், குடந்தை என்றும், குடவாயில் என்றும் கூறப்படுவன எல்லாம் ஓரே ஊரின் பெயரே. சோழர் குடந்தை என்று கூறப்படுவதால் இவ்வூர் சோழனுக்குரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. உ. வே. சாமிநாதையர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் போன்றோர் சங்க இலக்கியப்பாடல்களுக்கு உரை எழுதும் போது குடந்தை ஏன்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றனர். குடந்தை என்றும், குடந்தை வாயில் என்றும், குடவாயில் என்றும் குறிக்கப்பெற்ற ஊரே இன்று குடவாசல் என்று வழங்கும் ஊராகும். இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்திலுள்ளது. இல்லின் வாய் அல்லது வீட்டின் வாய் என்று பொருள்படும் வாயில் என்ற சொல்லுடன் வழங்கப்பெறும் சில ஊர்ப் பெயர்களில் குடந்தைவாயில் அல்லது குடவாயில் என்னும் இந்த ஊரும் ஒன்று. ஊர்கள் அமைந்துள்ள திசையை அவற்றின் பெயர் உணர்த்தும் நிலையும் இப்பெயரில் அமைகின்றது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெருநகரின் மேலவாசலாக அமைந்த இடம் நாளடைவில் ஓர் ஊராக அமைந்து குடவாசல் என்று பெயரி பெற்றிருக்க வேண்டும். (கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்திருந்தான் என்ற செய்தி, குடவாயிலில் ஒரு சிறைக் கோட்டம் அமைந்து இருந்த நிலையை நமக்கு உணர்த்துகின்ற குடவாசலில் அமைந்திருந்த பழைய கோட்டை மதில்கள் பற்றிய செய்தியைத் தேவாரமும் உணர்த்துகிறது. குடந்தை என்று நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களிலும் தேவாரப் பாடல்களிலும் குறிக்கப்படும் ஊர் இன்றைய கும்பகோணமாகும். இது குடமூக்கு என்றும் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் கூறப்பெற்ற குடந்தை, குடந்தைவாயில் குடவாயில் என்பது தற்காலத்திய குடவாசல் என்ற ஊராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் ஊரின் பெயர் காலப் போக்கில் பின்னர் வேறொரு பெயராகத் திரிதலும், இப்பெயரே பிறிதோர் ஊர்க்குப் பெயராக அமைதலும் ஆகிய தன்மையை நாம் காண முடிகிறது. நற்றிணையில் 27, 212, 379 ஆகிய பாடல்களையும், குறுந் தொகையில் 281, 369 ஆகிய பாடல்களையும், அகநானூற்றில் 35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 242ஆம் பாடலையும் பாடிய ரத்தனார் என்ற புலவரும், குறுந்தொகையில் 79ஆம் பாடலைப் பாடிய கீரனக்கன் என்ற புலவரும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
“தேர் வண் சோழர் குடந்தை வாயில்
மாரி அம்கடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறுநீலம் போன்றன விரலே” (நற் 379 : 7 9)
“பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே” (அகம். 44 / 17 19)
“கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே” (௸, 60: 13 15)