குடந்தை குடமூக்கு

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் எனச் சுட்டப்படும் ஊர். அன்று இவ்விரு பெயர்களாலும் வழங்கப்பட்டதாகத் செரிகிறது. குடமூக்கின் வடமொழிப் பெயர் மாற்றமே கும்பகோணமாயிற்று. அதுவே இன்று செல்வாக்குடன் திகழ்கின்றது. வைணவக் கோயில்களும் சைவக் கோயில்களும் நிறைந்த இடம். கோயில் பெருத்தது கும்பகோணம் என்பது பழமொழி. இங்குள்ள மூன்று கோயில்கள் தேவாரப்பாடல் பெற்றவையாக அமைகின்றன. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற கும்பகோணம் கும்பேசுவர சுவாமி கோயில் (சுவாமி கும்பம் போன்றவர்) குடந்தைக் காரோணத்தில் உள்ள விசுவநாதர் கோயில் (சம்பந்தர்) குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில் (அப்பர்) என்பன அவை. காசி குடந்தை கீழ்க் கோட்டம் ஐயடிகள் காடவர் கோன் இறைவன் பற்றி,
பாழ்க் கோட்டம் சேராமுன் பன்மாடத் தென் குடந்தைக்
கீழ்க் கோட்டம் செப்பிக் கிட (2) எனப் பாடும்
தன்மையைக் காண்கின்றோம். இவ்வூர்ப் பெயர்க் காரணத்தை ஆராயும்போது, முதலில் குடமூக்கு என்றே வழங்கப்பட்டு, பின்னர் குடந்தை என்றும். இன்று கும்பகோணம் என்றும் வழங்கப்படுகிறது. இவ்வூர்ப் பெயருக்குரிய காரணங்கள் பல என்பர். ஞானசம்பந்தரும் அப்பரும் சுட்டும் நிலையில் குடந்தை என்றும் குடமூக்கு எனவும் இரு பெயர்களாலும் வழங்கப்பட்டிருக்கக் காண்கின்றோம்.
கூரார் மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே – 72-1
கொடியார் விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவ மயிலார் காரோணத்தாரே-72-2
இவற்றுள் குடமூக்கு என்ற பெயரை இடைக்காலத்திலேயே தான் காண்கின்றோம். குடமூக்கில் வைணவக் கோயில்கள் பல உள. சிறப்பு பெற்றது சாரங்கபாணிக் கோயில். பெரியாழ்வார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற கோயில் இது. இடைக்காலத்தில் குடமூக்கு என்ற பெயர்பற்றிய எண்ணம் வரினும், குடந்தை என்ற பெயரைப்பற்றிய எண்ணம் சங்க காலத்திலேயே அமைய இரு குடந்தையும் ஒன்றா வேறா என்ற எண்ணம் எழுகின்றது. எனினும் இவை குடக்கு என்ற திசைப் பெயர் காரணமாக எழுந்த பெயர்கள் என்பது தெளிவான ஒன்று. 1.நகரத்தின் மேற்குப்பகுதியாக, மேற்கு வாயிலாக இருந் தமையின் பெற்ற பெயர் என்பர். பழிக் காலத்தின் போது வைக்கப்பட்ட அமுத கலசத்தை – குடத்தை இறைவன் வேட வடிவு கொண்டு இங்கே வந்து அம் பினால் அடிக்க உடைந்த மூக்கின் வழியே அமிர்தம் நான்கு பக்கங்களிலும் பரந்து நிலை பெற்றதால் குட, மூக்கு என்ற பெயர் பெற்றது. படைப்புக் காலத்திலேயே இறைவன் அமிர்த குடத்தில் எழுந்தருளியமையால் இறைவனுக்கு ஆதி கும்பேசுரர் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் தலபுராணம் கூறும். தஞ்சாவூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள் – பக். 45, 46