எடுத்து ஓதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவன
என்பது இச்சொற்றொடரின் பொருள். அவை வருமாறு:
அகரஈற்று உரிச்சொல் தடவுத்திரை, தடவுநிலை – என வருதல்.
அதவத்தங்கனி – என அகரஈற்றுப் பெயர் அத்துப் பெறுதல்.
நறவங் கண்ணி, குரவம் நீடிய – என ஆகாரஈற்றுப் பெயர் அகரமாகக் குறுகி
அம்முச்சாரியை பெறுதல்.
முழ, இர, சுற- என ஆகாரஈறு குறுகி உகரம் பெறாது வருதல்.
கள்ளியங்காடு – என இகரஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெறுதல்.
‘தீயின் அன்ன’ – என ஈகாரஈறு வேற்றுமைக்கண் இன் பெறுதல்.
‘திருவத்தவர்’ – என உகரஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெறுதல்.
‘ஏப் பெற்ற மான்’- என ஏகாரம் வேற்றுமைக்கண் எகரப்பேறின்றி
வருதல்.
‘கைத்து உண்டாம் போழ்து’, ‘கைத்து இல்லவர்’- என ஐகார ஈறு அத்துப்
பெற்று வருதல்.
புன்னையங்கானல், முல்லையந்தொடையல் – என ஐகார ஈறு அம்முப்
பெறுதல்.
கோயில் – என ஓகாரஈறு யகர உடம்படுமெய் பெறுதல்.
அகம்+ செவி = அஞ்செவி என அல்வழிக்கண் ககரஒற்றும் மகரமும்
கெடுதல்.
மரவம் பாவை, மரவ நாகம் – என இருவழியும் மரம் என்பதன் மகரம் கெட
அம்முப் பெறுதல். (மரத்தால் ஆனபாவை, நாகமரம்)
கான்- பொன்- என்பன, கானம் – பொன்னந்திகிரி – பொன்னங் குவடு – என
னகரஈறு இருவழியும் அம்முப் பெறுதல்.
‘வெதிரத்து நரல் இசை’ – என ரகரஈறு வேற்றுமைக்கண் அத்துப்
பெறுதல்.
‘நாவலந் தண்பொழில்’- ‘கானலம் பெருந்துறை’- என லகர ஈறு வேற்றுமையில்
அம்முப் பெறுதல்.
நெய்தலஞ் சிறுபறை – என அல்வழிக்கண் லகரஈறு அம்முப் பெறுதல்.
அவ் + இடை = ஆயிடை – என வகர ஒற்று வேறுபட முடிதல்.
தெவ் +முனை = தெம்முனை – என வகரம் கெட்டு மகரம் பெற்று
முடிதல்.
அ என்னும் சுட்டு ‘அன்றி’ எனத்திரிதல்.
கோங்கின் முகை, தெங்கின் பழம் – எனக் குற்றியலுகர ஈறு ‘இன்’
பெறுதல். (தொ. எ. 483. நச் உரை)
ஆரங்கண்ணி – என ஆர் என்ற ரகரஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்று
முடிந்தது.
முளவு மா, பிணவு நாய் – என அல்வழிக்கண் மென்கணம் வந்துழி,
‘குறியதன் இறுதிச்சினை’ கெட்டு உகரம் பெற்று முடிந்தன.
‘அருமருந்தன்னான்’ எனற்பாலது, அருமருந்தான் அரு மந்தான் – என
மரூஉவாய் முடிந்தது.
சோணாடு – மலாடு – என்பனவும் சோழனாடு – மலைய-மானாடு -என்பவற்றின்
மரூஉமுடிபாம். பொதுவில் எனற் பாலது பொதியில் என முடிந்ததும் அது. (483
இள. உரை)