கிடங்கில்‌

நடுநாட்டிலே ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின்‌ ஆட்சியிலிருந்த ஓரூர்‌ தென்‌ ஆர்க்காடு மாவட்டத்தில்‌ இண்டிவனம்‌ நகரத்தின்‌ அருகில்‌ உள்ளது. கிடங்கல்‌ என இப்பொழுது வழங்கப்‌ பெறுகிறது. ‌இந்த ஊர்‌ மிகப்‌ பழமையானது. இந்‌நகரத்‌ தெருக்களில்‌ இருந்த புழுதியை யானைகளின்‌ மதநீர்‌ அருவி நனைத்து அடக்கியதாக சங்க இலக்கியம்‌ கூறுகிறது. இவ்வூர்‌ திண்டிவனம்‌ நகரில்‌ உந்து வண்டி நிலையத்தை அடுத்து, பள்ளமான இடத்தில்‌ அமைந்துள்ளது. அங்கே ஒரு சிவன்‌ கோயிலும்‌, சில தெருக்களும்‌ உள்ளன. அதைச்‌ சுற்றிலும்‌ இடிந்த மதிற்சுவர்கள்‌ காணப்படுகின்றன. அம்‌மதிற்‌ சுவர்களை சுற்றிலும்‌ அகழி இருந்திருக்க வேண்டும்‌. அகழி இருந்தமைக்கான அடையாளங்கள்‌ காணப்படுகின்றன. அவ்வூரிலுள்ள சிவன்‌ கோயிலில்‌, கி.பி. 11 மூதல்‌ 15ஆம்‌ நூற்றாண்டு வரையிலான காலத்துக்‌ கல்வெட்டுகள்‌ சில உள்ளன. அவை சோழர்‌, சம்புவராயர்‌, விசயநகர வேந்தர்களின்‌ காலக்‌ கல்வெட்டுகள்‌. “ஓய்மானாட்டு இடக்கை நாட்டுக்‌ இடங்கில்‌” என்னும்‌ ஊரில்‌ அக்‌கோயில்‌ இருப்பதாகக்‌ கல்வெட்டுகள்‌ கூறுகின்றன. இதற்கு ஒரு கிலோ மீட்டர்‌ வடக்கில்‌ உள்ள திண்டிவனத்‌தில்‌ ஒரு சிவன்‌ கோயில்‌ உள்ளது. அது திண்டீசுரம்‌ என்பது. அக்கோயிலிலுள்ள சோழர்காலத்துக்‌ கல்வெட்டுகள்‌ கி.பி. 1300 காலத்தவை. அக்கல்வெட்டுகள்‌ அக்கோயில்‌ “ஓய்மானாட்டு கடக்கைநாட்டுக்‌ இடங்கலான இராஜேந்திர சோழ நல்லூர்த்‌ திண்டீசுரம்‌’” என்று குறித்துள்ளன. ஆகவே அதுவும்‌ கிடங்கல்‌ என்னும்‌ ஊரில்‌ இருந்தது என அறியலாம்‌. இன்றைய திண்டி வனம்‌ நகரத்தின்‌ பெரும்பகுதி பண்டையக்‌ கிடங்கிலே என்று கூறலாம்‌. இன்று ‘கிடங்கல்‌’ என்ற ஊர்‌ நல்லியக்கோடனின்‌ அரண்மனை இருந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்‌. செஞ்சியில்‌ இருந்த நவாபுவின்‌ ஆட்சிக்குட்பட்ட அம்பர்கான்‌ என்பவர்‌ கி.பி. 1677இல்‌ கிடங்கிற்‌ கோட்டையையும்‌ அகழியையும்‌ சீர்திருத்தி அமைத்தார்‌ என்று தெரிகிறது, முற்காலத்தில்‌ சிறந்து விளங்கிய கிடங்கல்‌ இப்பொழுது திண்டிவனத்தின்‌ ஒரு உட்பகுதியாக அமைந்திருக்கிறது. (அகழி சூழ்ந்தபகுதி பொதுவாகக்‌ கிடங்கில்‌ என்று கூறப்‌ படும்‌.) கிடங்கில்‌ காவிதி கீரங்கண்ணனார்‌, இடங்கில்‌ காவிதிப்‌ பெருங்கொற்றனார்‌, இடங்கில்‌ குலபதி நக்கண்ணனார்‌ ஆகிய சங்கப்‌ புலவர்கள்‌ இவ்வூரினர்‌. நற்றிணையில்‌ 218ஆம்‌ பாடலைக்‌ காவிதி கீரங்கண்ணனாரா்‌ என்ற புலவரும்‌, 364ஆம்‌ பாடலைக்‌ காவிதிப்‌ பெருங்கொற்றன்‌ என்ற புலவரும்‌, குறுந்தொகையில்‌ 252ஆம்‌ பாடலை குலபதி நக்கண்ணன்‌ என்ற புலவரும்‌ பாடியுள்ளனர்‌.
“கிளைமலர்ப்‌ படப்பைக்‌ கிடங்கில்‌ கோமான்‌ (பத்துப்‌: சிறுபாண்‌, 160)
“அமுதம்‌ உண்க, நம்‌ அயல்‌ இலாட்டி
கிடங்கில்‌ அன்ன………..
பெருமலை நாடனை வரூஉம்‌” என்றோளே” (நற்‌ 65:2)
கிடங்கு என்ற சொல்‌ அகழி என்றும்‌ பண்டகசாலை என்றும்‌ பொருள்‌ படுவதால்‌ இந்த இரண்டில்‌ ஒன்றன்‌ அமைப்பால்‌ பெற்ற பெயர்‌ என்று எண்ணலாம்‌.