காரிக்கரை

வடதிசை மேல் வழிக் கொள்ளும் நிலையில், திருக்காளத் திக்கு முன்பாகத் திருநாவுக்கரசர் சென்ற இடமாகக் காரிக்கரை அமைகிறது. எனவே திருக்காளத்திக்கு முன்னர் இவ்வூர் அமைந்திருக்கக் காண்கின்றோம். சிவன் கோயில் தலம் என்பது மட்டும் தெரிகிறது. கரை என்று வரும் தன்மையால் காரி என்பது ஆறாக இருக்கலாம். காரியாற்றங்கரையில் உள்ள தலம் என்ற நிலையில் காரிக்கரை எனப் பெயர் பெற்றிருக்கலாம். திரு. நாச்சிமுத்து ஆற்றின் நீரின் கறுப்பு நிறத்தால் பெயர் பெற்ற ஆறுஒன்று காரியாறு எனச் சுட்டப்படுகிறது என்கின்றார். எனவே காரிக்கரையும் இதனைப் போன்று பெயர் பெற்றிருக்க வாய்ப்பு அமைகிறது. சங்க இலக்கியத்திலும் காரியாறு என்ற ஒரு இடம் அமைகிறது.