சுந்தரர் பாடல் பெற்ற இவ்வூர் இன்று கானாட்டம் புலியூர் என வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கிறது. கல்வெட்டில் இவ்வூரின் பெயர். விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க் கானாட்டு முள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் பதிகம் (40) இவ்வூரின் வளத்தை ஒவ்வொரு பாடலிலும் சுட்டுகின்றது.
சடையானை விடையானைச் சோதியெனும் சுடரை
அரும்புயர்ந்த வரவிந்தத் தணிமலர்க ளேறி
யன்னங்கள் விளையாடு மகன்றுறை யினருகே
கரும்புயர்ந்து பெருஞ் செந்நெல் நெருங்கி விளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே (40-3)
என்பது ஒரு பாடல் பகுதி. முள்ளூர் என்பது தாவர அடிப்படைப் பெயர் என்பது வெளிப்படை. மேலும் இப்பெயரை நோக்க, முதனிலையில் இவ்வூரின் பெயர் முள்ளூர் என்பதும் மேலும், பிற முள்ளூரினின்றும் இதனைத் தனிப்படுத்த, கானாட்டு முள்ளூர் எனச் சுட்டினர் என்றும் கொள்ளலாம். சங்ககால இலக்கியம் சுட்டும் முள்ளூர் என்ற ஊர்ப்பெயரும் முள்ளூர் ஊர்ப்பெயராக அமைந்த நிலையைக் காட்டும். மேலும் பழம் ஊரான இந்த முள்ளூரே, பின்னர் கானாட்டு முள்ளூர் என்று சுட்டப் பட்டதோ என்பதும் ஆய்வுக்குரியது.