இன்று காளையார் கோயில் என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. மதுரையிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உள்ளது. ஞானசம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பெற்றது இத்தலம். கானப்பேரூர், கானப்பேர் என்ற இரண்டு வடிவிலும் அமையும் ஊர்ப்பெயர். பின்னர் கோயில் சிறப்பு சைவப்பற்று காரணமாகப் புராணக்கதை தொடர்பாகக் காளையார் கோயில் என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஊர்ப்பெயரே அவ்வாறாயிற்று என்பது தெரிகிறது காட்டுப்பகுதியில் அமைந்த ஊராக இது இருந்ததனைக் கானப் பேர் என்ற பெயர் சுட்டுகிறது. மேலும் பண்டு தொட்டே இதன் சிறப்பு, சங்க இலக்கியச் சான்றுகள் வழி தெளிவுறுகிறது இவ்வூர் சிறப்பாக அன்று காணப்பட்டது என்பதனைக் கற்றார்கள் தொழுதேத்தும் கானப்பேர் என்ற சேக்கிழாரின் கூற்று தெளிவாக்கும் (பெரிய -திருஞா-886). காவார்ந்த பொழிற்சோலை கானப்பேர் என்பது திருஞானசம்பந்தர் கூற்று (313-7). கார் வயல் சூழ் கானப்பேர் உறைகாளையே என்பது சுந்தரர் பாடல் (84-1). மேலும் சிவபெருமான் திருவந்தாதியிலும் (51) இவ்வூர் சுட்டப்படுகிறது.
கல்லாட தேவ நாயனார் தம்முடைய தேவர் திருமறத்தில்,
வாய்க்கலசத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப்பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியாற் நீக்கி (21-2)
என்று சுட்டிச் செல்லக் காண்கின்றோம். இப்பாடலில் குறிப் பிடப்படும் சிவன் காளத்தியிலுறைபவன். எனவே இங்குக் கானப் பேருறை என்பது, கானகத்தில் உறையும் சிவன் எனக் கருதவே இடம் அமைகிறது. இந்நிலையில் கானப்பேரூர் என்பது காட்டுப் பகுதியில் எழுந்த புதிய குடியிருப்பே என்பது தெளிவாக அமைகிறது. மேலும், சங்க காலத்திலேயே கானப் பேரெயில் உக்கிரப் பெருவழுதி என்ற எண்ணமும் இவ்வூர்ப் பெயருக்கு விளக்கம் தருகிறது. கானப்பேரெயில் என்பது ஊரைச் சுற்றிக் கானகத்தில் இருந்த பெரிய கோட்டையாக அமையலாம். இக்கோட்டைப் பகுதி பின்னர் தனி ஊராக பெயர் பெற்றிருக்கலாம். எனவே கானப்பேரெயில் என்ற பெயர் பின்னர் கானப்பேர் என்றும் கானப்பேரூர் என்றும் சுட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் கானப்பேர் என்பது பழமையான ஊர் என்று தெரிகிறது. என்ற எண்ணமும் இவண் நோக்கத்தக்கது. இத்தலம் சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று ஒரு கோட்டையாக விளங்கியது. அஃது உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய வேந்தனுக்கு உரியதாகத் திகழ்ந்தது. வேங்கை மார் பன் என்னும் சிற்றரசனிடம், இருந்து உக்கிரப் பெருவழுதி தெனைக் கைப்பற்றினான் எனப் புறநானூறு கூறுகிறது. புறநானூற்றுப் பாடல்,
நிலவரை இறந்தகுண்டு கண் அகழி
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்
கதிர் நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அரும் குறும்பு உடுத்த கானப் பேரெயில்
– (ஐயூர் மூலங்கிழார்)
என்பது. காளையார் கோயிலையே திருநாவுக்கரசர் காளேச்சுரம் என்றும் குறிப்பிட்டாரோ எனத் தோன்றுகிறது (285-8).