பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேரெயிலைக் கைப்பற்றியவனே என்று சங்க இலக்கியத்தில் கூறப்பெற்றிருக்கிறது. அதனால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி எனப் பெயர் பெற்றான். அவனை ஐயூர் மூலங்கிழார் பாடியபாடல் மூலம் அக்கோட்டையின் அகழியின் ஆழம், மதிலின் உயரம், மதிலின் மேல் அமைத்து ஞாயில், கரவற்காடு ஆகியவற்றைப் பற்றி அறிகின்றோம். (புறம். 21) கானப்பேர் எனற இடத்தில் அமைந்தமையால் கானப் பேரெயில் என்று அக்கோட்டையைக் குறித்துக்கூறினா் போலும். அக்கோட்டையின் தலைவனாக வேங்கைமார்பன் என்ற வீரன் இருந்தான். அவனைத்தான் உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டியன் வென்று கைப்பற்றினான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாமதுரைக்குப் பக்கத்தில் உன்ள காளையார் கோயில்தான் கானப்பேர் என்று கருதுகின்றனர். “கானப்பேர் உறைகாளை” என்று தேவாரத்தில் அவ்வூர் ஈசன் குறிக்கப் பெற்றுள்ளதால் அவ்வூரின் பெயர் கானப்பேர் என்றுதான் இருந்திருக்க வேண்டும். பழைய ஊர்ப் பெயர்கள் மறைந்து கோயில் பெயர்களால் பிற்காலத்தில் வழங்கும் ஊர்களும் உண்டு. அம்முறையில் காளையார் அமர்ந்தருளும் கோயில் காளையார் கோயில் என ஆகி நாளடைவில் அக்கோயிற்பெயர் ஊர்ப்பெயராக, பழைய பெயர் மறைந்தது போலும், சங்ககாலத்தில் கானப்பேர் என்றிருந்த பெயர் தேவார காலத்திற்குப் பிறகு காளையார் கோயில் என ஆகியிருக்க வேண்டும்.